குறிப்பு:

சௌந்தர சுகன் 1987 முதல் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகிறது. சனவரி - 2011 இதழ் எண்:296

சௌந்தரசுகன் அச்சு இதழில் வெளியாகும் படைப்புகளில் சில, சௌந்தரசுகன் வலை இதழில் பதிவாகும். இவற்றை வாசித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். விரிவான விமர்சன மடல்களை சுகன் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள்.


Wednesday, June 24, 2009

களமும் காட்சியும்

அவர்கள் விளையாடுகிறார்கள்
ஒரே நேரத்தில்
விளையாட்டு மைதானத்திலும்
மக்களின் வாழ்விலும்

ஸ்கோர் என்னவென
கேட்பவர்களுக்கு
அவ்வப்போது சொல்கிறார்கள்
நாலு விக்கெட்டிற்கு
நூறு ரன்
ஒரு ரவுண்ட்
விமான குண்டு வீச்சுக்கு
நூறு பிணங்கள்.
மைதானத்தில்
வேகமாய் சுழன்று வரும் பந்துகளில்
நடவு செய்த குச்சிகள்
சரிந்து வீழ்கின்றன.
விமானத்தில்
குறிபார்த்து போடப்படும் குண்டுகளில்
சிதறி விழுகின்றன
வீதியில் நடமாடும்
மனித உடல்கள்

தொலைக்காட்சியின் முன்னால்
தவமிருக்கும் ரசிகர்களுக்கோ
பரம திருப்தி
ஒரே நேரத்தில்
இருவேறு சேனல்களில்
விறுவிறுப்பான விளையாட்டையும்
உக்கிரமான போரின் மரண ஓலத்தையும்
ஒரே நேரத்தில் பார்க்க முடிவதில்.

இ.சாகுல் அமீது

Monday, June 22, 2009

இருள் குருதி

கோடுகளால் செய்யப்பட்ட
இதயச் சுவர்களுக்குள்
குருதியின் நிறம்
இருளாக இருந்தது

கொஞ்சம் கோடுகளை
இரவலாக கேட்டேன்
சில ஓவியங்களாக
மாற்றி விடலாமே என்று

உரிமை உடையவன்
முறைத்துப் பார்த்தான்
கண்களிலும் கூடக்
காணவில்லை கருநீலத்தை

போவென அதட்டிய
விரலிடுக்குகள் முழுவதிலும்
அங்கங்கே
முளைத்திருந்தன முட்புதர்கள்

கற்பனை என்றுதான்
முதலில் நினைத்தேன்-அவன்
கடித்துத் துப்பிய
வார்த்தைகளின் எச்சில்
முனைகளிலிருந்து
வரிசையாய் உதிர்ந்தன
சிறுசிறு கூர் முட்கள்

வருத்தமாய் இருந்தாலும்
ஓவியக்கோடுகளை
வாங்க முடியவில்லை

என்றாலும் கொப்பளித்தது
இரக்கம்
இவன் போலவே இன்றைய
உலகமும்
மெதுமெதுவாய் மாறுவது
குறித்து!

-அனலேந்தி

நிழல்களோடு நிஜங்கள்

என் நிழல்பட்டு
நடந்து போகும் அவன் நிழலோடு
உரசி செல்கிறது இவன் நிழலும்...

கடந்து கொள்கிற நிஜங்கள்
கைக்குலுக்காமல் தொடர்கின்றன
களர் நிலத்திலும்...

நட்பாக்கி விடும் நிழலின் மரத்தை
வீழ்த்துவதிலேயே இருக்கிறது
மனித விருப்பம்...

அபகரித்தல்
அறியாதவாறே நிகழ்த்தப் படுகிறது
கரை அரிக்கும் அலையாய் வருடி...

அடுக்ககங்களின் நிழல்கள் கூட
நீழ்வதில்லை
குடிசைகளின் திசை நோக்கி...

வளாகங்களை
வசீகரமாக விரித்துக் கொள்கின்றவர்கள்
சுவரெழுப்பிக் கொள்கின்றனர்
மனங்களை...

எழும்பும் சப்தம்
எல்லாச் செவிகளையும் தான்
தீண்டுகிறது...

பார்வைகள் கூட
பட்டுத்தான் நகர்கிறது புறத்தில்...

என்பதை மீறி
தம் நிழல் அலைகளை
தாமே எழுப்பிக் கொள்கின்றனர்
தனக்கானதாக இருக்கும்படி...

ஒரு நாளில்
அவரவர் நிழல்களே
அவரவர்களை விழுங்கி விடுவதிலிருந்து
தப்பிக்க முடியாமல் நிஜங்களாகி விடும்
நிழல்களோடு நிஜங்கள்...

-கா.அமீர்ஜான்

Sunday, June 21, 2009

கவிதை - லசி

உன்
இருமலின் அர்த்தம்
புரிந்து
குழந்தைகளின்
உறக்கம் கலையாமல்
உன் அறையில்
விடியும் வரை நான்.
சில நாட்களாய்
அந்த இருமலை எதிர்பார்த்து
நான் உறங்குவதே இல்லை.
விடியும் வரையும்
நீ இருமுவதே இல்லை
அப்படிதான்
என்ன வயதாகி விட்டதோ
உனக்கு.

-லசி

Monday, June 15, 2009

கவிதை - சுகந்தா

எந்த உறவும் இல்லாமல்
நடிப்பும் இல்லாமல்
அன்புக்காக
ஏங்கும் நீ
அனாதை என்று
அழைக்கப்படுகிறாய்!

எல்லா உறவுகளுடனும்
அன்பு இல்லாமல்
நடித்தால் மட்டுமே போதும்
என்று வாழ
பழகிக் கொண்ட நான் -
என்னவென்று அழைக்கப் படுவேன்!

-சுகந்தா

சுகன் - சூன் - 2009

சொன்னானாம்
மீண்டும் மீண்டு்ம் ஒலிபரப்பான
நீண்ட இரங்கல் மி்கையென்றும்
காட்டப்பட்ட தனது
உடலின் ஒப்பனையில்
கவனம் போதாதென்றும்!

-இரா.எட்வின

சுகன் கவிதை

எழுத்துப் புழுக்கைகளை
இட்டுச் செல்லும்
எழுதுகோல் ஆட்டிற்கு
மேய்ச்சல் எது!
தீனி எது!
எது!எது!எது!
என்னைத தவிர...

-சுகன்

சௌந்தரசுகன் சூன் 2009