குறிப்பு:

சௌந்தர சுகன் 1987 முதல் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகிறது. சனவரி - 2011 இதழ் எண்:296

சௌந்தரசுகன் அச்சு இதழில் வெளியாகும் படைப்புகளில் சில, சௌந்தரசுகன் வலை இதழில் பதிவாகும். இவற்றை வாசித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். விரிவான விமர்சன மடல்களை சுகன் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள்.


Sunday, December 11, 2011

தலையாட்டிகள்

     பால் விலையேற்றம், பேருந்து கட்டண உயர்வு எல்லாவற்றிற்கும் காரணம் கருணாநிதிதான் என ஜெயலலிதா தனது செயல்களை ஞாயப்படுத்த முயல்வது பரிதாபகரமாக இருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு இழைக்கின்ற அநீதி இது, 

     விலையேற்றத்தின் அத்தனை சுமைகளையும் சுமப்பது கருணாநிதி அல்ல. ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மிக சாதாரண மக்கள். ஏழை எளிய மக்களை நேரடியாக பாதிக்கிற மிக முக்கியமான பாதிப்புகள் இவை. ஜெயலலிதாவின் பக்குவமின்மையைதான் இது காட்டுகிறது. இந்த விலையேற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளர்க்கியது. நிதானமாக பார்த்து பார்த்து செய்ய வேண்டிய விலை உயர்வை இப்படி தடாலடியாக தந்திருப்பது ஜெயலலிதாவின் வீரமாக கூட இருக்கலாம். பாவம் மக்கள். ஜெயலலிதாவை சுற்றி தலையாட்டிக் கூட்டம் தான் இருக்கிறதே தவிர, துணிந்து அவருக்கு எடுத்துரைக்க, அறிவுரை நல்க யாருக்கும் துணிச்சல் இல்லை. சொல்கிறவர்கள் தூக்கியெறியப்படுவார்கள் என்பதைத் தெரிந்தும் இப்படிப்பட்ட விபரீதங்களில் யார்தான் இறங்க முன்வருவார்கள். 

     ஊடகங்களும் பட்டும் படாமல் பேசுகின்றன. ஜெயலலிதாவின் அரசுக்கு இத்தகைய நடவடிக்கைகள் பலவீனமாகவே அமையும். சமச்சீர்கல்வியை எதிர்த்து செலவழித்த கோடிக்கணக்கான பணம், சட்டசபை மாற்றத்திற்கு செலவழித்த பணம், கொடுத்த மற்றும் கொடுக்கப்பட வேண்டிய இலவசங்களுக்கு வேண்டிய பணத்தை எல்லாம் வேறு எந்த வழியில் ஈட்ட முடியும். முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களை களைந்தெறிந்து விட்டு இப்படி தான் என்கிற அகங்காரத்தில் செயல்படுவது புத்திசாலிதனமான ஆட்சி முறை இல்லை என்பதை ஜெயலலிதா அனுபவத்தில் தான் புரிந்து கொள்வார். 

     இன்னும் வரவிருக்கும் தொடர் விலையேற்றங்களை எண்ணி உண்மையிலேயே மக்கள் மிரண்டு போய் நிற்கிறார்கள். ஆட்சி மாற்றம் இப்டிப் பட்ட அவலங்களாய் தங்கள் தலையில் விடியும் என்பதை பாவம் நமது அப்பாவி மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். உண்மையில் இந்த 6 மாத ஆட்சியில் வெறுப்புணர்வில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். தி.மு.க. அரசின் ஸ்பெக்ட்ரம் ஊழல், நில அபகரிப்பு மோசடிகள் எல்லாம் ஏழை, எளிய மக்களை பாதித்தவை அல்ல. ஆனால் இந்த விலையேற்றங்கள் முழுக்க முழுக்க ஏழை எளிய மக்களை, அவர்களின் அன்றாட வாழ்வை குதறி எடுக்கின்ற பேரிடர்கள். மக்கள் ஒப்பு நோக்குவார்கள். இலாப, நட்டக் கணக்குகளை போட்டுப் பார்ப்பார்கள். ஆள்கிற ஜெயலலிதா இப்போதாவது நிதானிக்க வேண்டும். தனக்கு மக்கள் அளித்த வாய்ப்பை எண்ணி சிந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக அவர்களின் அவலத்தை சொல்ல வேண்டியது நமது எழுதுகோலின் தலையாய கடமை.

     அண்ணா நூலகத்தின் இடமாற்றம் இந்த அரசு அறிவுலகத்தின் மீது எப்படிப்பட்ட மதிப்பை வைத்திருக்கிறது என்பதற்கான அடையாளமாக இருக்கிறது. முழுக்க முழுக்க நூலகத்திற்கு என்று வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டு செம்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற நூலகத்தை மாற்றும் முடிவு மிகவும் அபத்தமானது.

     தமிழகத்தில் இன்றைக்கு அரசு மருத்துவமனைகள் பாழ்பட்டு கிடக்கின்றன பல வழிகளிலும். அந்த மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் பிரிவை முறைப்படுத்தி, செழுமைப்படுத்தி நல்ல முறையில் இயக்கினாலே மக்கள் பயன் அடைவார்கள். சென்னையின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை ஒரு காலததில் எவ்வளவு தரம் வாய்ந்ததாக இருந்தது. இன்று எப்படி இருக்கிறது. அதையெல்லாம் சரி செய்வதை விட்டு விட்டு முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்டது என்கிற ஒரே காரணத்திற்காக அண்ணா நூலகத்தை கலைப்பது என்பது அதிகார அறியாமை.

     எதையும் தான் தான் தொடங்கியிருக்க வேண்டும். தான் தொடங்கியதாகத்தான் கல்வெட்டு பேசவேண்டும் என்று நினைத்து செயல்பட்டால் அது வீண் பொருள் செலவுக்குத்தான் வழி வகுக்கும். இந்தச் சிந்தனை மனநோயும் கூட. முந்தைய அரசின் நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதும் புதிய நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து மக்களுக்கு நன்மைகளை செய்வதும்தான் நல்லாட்சிக்கு இலக்கணம் என்பதை ஜெயலலிதா உணர்வாரா என்பது பெரிய கேள்விக்குறிதான். அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயையும் பார்த்து பார்த்து செலவிட வேண்டும். அது மக்களின் பணம். ஆட்சியாளர்கள் அடிப்படையில் தெரிந்துக் கொள்ள வேண்டிய பாடம் இது. 

     காமராஜர் ஆட்சியின் போத கவிஞர் எஸ்.டி.சுந்தரம், முதலமைச்சர் காமராஜரிடம் நாமும் நம் ஆட்சியின் சாதனைகளையெல்லாம் விளக்கி ஒரு விளம்பர படம் எடுப்போம் அத்திரைப்படத்தைத் தமிழகத்துத் திரையரங்குகள் அ8னத்திலும் திரையிடச் செய்வோம் என்றாராம்.

     சரி இதற்கு என்ன செலவாகும்? என்று கேட்டாராம் காமராஜர். அதற்கு கவிஞர் சுமார் 3 இலட்சம் வரை செலவாகும் என்றாராம். துடித்துப் போன காமராஜர் அடேங்கப்பா செலவு மூணு இலட்சமா? மக்களோட வரி பணத்துல நமக்கு விளம்பரமா? அந்தப் பணத்துல நான் இன்னும் 3 பள்ளிக்கூடத்தைக் கட்டி திறந்திடுவேன். வேண்டாம், இந்த மாதிரி யோசனைகள் எல்லாம் வேண்டாம் என்றாராம். 

     அதனால்தானே காமராசர் தன்னைவிட மிக வயது குறைந்த அரசியல் அனுபவம் இல்லாத தியாகம் எதவும் செய்யாத ஒரு இளைஞனிடம் தோற்றுப் போனார். அவர் தோற்றுப்போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மக்கள் நலன் பாதிக்கக்கூடாது என்று கவலைப்பட்டார். அதனால்தான் அவர் பெருந்தலைவர். எப்படிப்பட்ட தலைவர்கள் அமர்ந்திருந்திருக்கிறார்கள் தமிழகத்து முதலமைச்சர் நாற்காலியில். வீழ்ந்துப் போன மரத்தின் அருமையை இப்போது நினைத்துப் பார்த்து என்ன பலன்? அது போன்ற மரங்கள் இனி முளைக்குமா? என்பதற்கான கேள்வி மட்டும் கையில் இருக்கிறது. பாலைவனத்தில் அரசமரம், ஆலமரம் முளைப்பது என்பது நடக்கிற காரியமா என்ன?


     


No comments:

Post a Comment