குறிப்பு:

சௌந்தர சுகன் 1987 முதல் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகிறது. சனவரி - 2011 இதழ் எண்:296

சௌந்தரசுகன் அச்சு இதழில் வெளியாகும் படைப்புகளில் சில, சௌந்தரசுகன் வலை இதழில் பதிவாகும். இவற்றை வாசித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். விரிவான விமர்சன மடல்களை சுகன் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள்.


Monday, June 22, 2009

நிழல்களோடு நிஜங்கள்

என் நிழல்பட்டு
நடந்து போகும் அவன் நிழலோடு
உரசி செல்கிறது இவன் நிழலும்...

கடந்து கொள்கிற நிஜங்கள்
கைக்குலுக்காமல் தொடர்கின்றன
களர் நிலத்திலும்...

நட்பாக்கி விடும் நிழலின் மரத்தை
வீழ்த்துவதிலேயே இருக்கிறது
மனித விருப்பம்...

அபகரித்தல்
அறியாதவாறே நிகழ்த்தப் படுகிறது
கரை அரிக்கும் அலையாய் வருடி...

அடுக்ககங்களின் நிழல்கள் கூட
நீழ்வதில்லை
குடிசைகளின் திசை நோக்கி...

வளாகங்களை
வசீகரமாக விரித்துக் கொள்கின்றவர்கள்
சுவரெழுப்பிக் கொள்கின்றனர்
மனங்களை...

எழும்பும் சப்தம்
எல்லாச் செவிகளையும் தான்
தீண்டுகிறது...

பார்வைகள் கூட
பட்டுத்தான் நகர்கிறது புறத்தில்...

என்பதை மீறி
தம் நிழல் அலைகளை
தாமே எழுப்பிக் கொள்கின்றனர்
தனக்கானதாக இருக்கும்படி...

ஒரு நாளில்
அவரவர் நிழல்களே
அவரவர்களை விழுங்கி விடுவதிலிருந்து
தப்பிக்க முடியாமல் நிஜங்களாகி விடும்
நிழல்களோடு நிஜங்கள்...

-கா.அமீர்ஜான்

No comments:

Post a Comment